Published Date: January 13, 2023
CATEGORY: GENERAL
நமது நிருபர் ஆசியாவின் 2 வது பெரிய இலக்கியத் திருவிழா கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது. இந்த விழாவில் 12 நாடுகளில் இருந்து 400 பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், இரண்டு லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
4 நாட்கள், 5 அரங்குகளில் இந்த இலக்கிய திருவிழா புத்தகக் கண்காட்சி நடக்கிறது. நேற்று மாலை இதனை கேரளா முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: கேரளாவில் ஆண்டுதோறும் திருவனந்தபுரத்தில் திரைப்பட விழா, கொச்சியில் கலாச்சார விழா, கோழிக்கோட்டில் இலக்கிய விழா நடத்துகிறோம். புத்தகம் படிப்பது எங்கு மறைந்தாலும் கேரளாவில் மறையாது. கோழிக்கோடு கலாச்சார கடற்கரை. இதன் மேம்பாட்டிற்கு ரூபாய் 7 கோடி ஒதுக்கி உள்ளோம். இவ்வாறு பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது:
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று தமிழில் கூறுவோம். அதனை சிறப்பிக்கும் வகையில் இதுபோன்ற இலக்கிய விழாக்கள் தேவை. கோழிக்கோடு இலக்கிய நகரம் என இந்நகர மேயர் குறிப்பிட்டார். அதைப்போன்று பழங்காலசங்க இலக்கியம் தழைத்த மதுரை மாநகரின் எம்.எல்.ஏ. நான் என்பதில் பெருமை. தமிழ் இலக்கிய பெருமை வாய்ந்தது மதுரை. இலக்கியம் நமது கலாச்சாரத்தின் அடையாளம். அதனை நாம் காக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
நோபல் பரிசு பெற்ற அடா யோனத், இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா நாராயண மூர்த்தி, பாப் பாடகி உஷா உதுப் பேசினார்.
ஜன.15 வரை நிகழ்ச்சி நடக்கிறது. ஆசியாவின் இரண்டாவது பெரிய இலக்கிய திருவிழாவாக கருதப்படும் இந்நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், நிபுணர்கள், தொழில்முனைவோர், அரசியல்வாதிகள், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பேசுகின்றனர்.
ஜன.15 ல் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல் 'நான் கண்டறிந்த அரசியல்' என்ற தலைப்பில் பேசுகிறார். கேரளா அரசு மாநில கலாச்சார, சுற்றுலாத்துறை ஆதரவோடு டி.சி புக்ஸ் நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
Media: Dinamalar